என் சொல்வேன் என் கிழவா.. என் சொல்வேன்..
உனை என் கடவுளெனச் சொல்ல ஆசைதான்..
ஆவியாய் வந்தெனை அடித்தோட விட அப்போதேனும் வருவாயென்ற சிறு நப்பாசை தான்..
வா வா தலைவா என்றழைக்க ஆசைதான்..
அதரம் விரிய அறிவு கெட்டவனென ஏசி, நீயும் நானும் சமமென்றுரைத்து நீயென் தலை குட்டிச் செல்ல அதை நான் ரசித்திட ஆசைதான்..
அலங்காரக் கண்ணாடிக்குள் எனை நான் கண் டேமார்ந்த காலம் போய் நீ வீசிய பழைய வெங்காயத்தில் தொலைந்தேன் மீளவில்லை இன்னும்..
உரிக்க உரிக்க செதில் செதிலாய் விரிந்து வையம் அளக்கிறேன், பரவசம் கொள்கிறேன் பல கோணங்களிலும்..
சாக்கடைக்குள் வீசப்பட்ட செல்லாக் காசாய்க் கிடந்தோம்,
காந்தமென வந்தாய்,
ஈர்த்தாய்,
கரை சேர்த்தாய்..
இதோ இங்கே பொக்கிஷமாய் சில, போர்வெளியில் சில, போகுமிடமெங்கும் சில என
உன் போதனையிலே
சிரம் உயர்த்தி சிலிர்க்கின்றோம்..
சாதிமதக் கோட்பாட்டு விளக்கினோடு சுற்றித் திரிந்த விட்டிலென மாண்டிருந்தோம்..
புட்டத்தில் உதைத்து,
புத்தியை விதைத்து மின்மினியாக்கினாய்..
இதோ இப்போது விண்ணெங்கும் மிளிர்ந்து பறக்கின்றோம்..
கத்தியை வீசியிருந்தால்
காலச்சுழலில் காயம்
காணாமல் போயிருக்கும்..
மாறாய் நீ கருத்தினை வீசினாய்.. கருவெனத் திமிறியே அவை எம்மில் பல கலகங்கள் புரிந்தன..
விதையென விதைத்தாய், விடியலெங்கும் விருட்சமாய்
தொடருதே உன்
வினோத வேட்கையது..
உன்னால் படர்ந்த விழுதுகள் பற்றியே பயணிக்கிறோம்..
பரதேசம் தேடியோடி ஒடுங்கிய
காலம் போய்,
பலதேசம் எங்கிலும் தடயங்கள் விட்டுப் பறக்கிறோம்..
உன்னாலேதான் எல்லாம் கிழவா..
பல்கோடி புத்தகங்கள் இப் பாரதம் கண்ட பின்னும்,
புரட்ட புரட்ட ஒவ்வொரு முறையும் புரட்சிக் கணலை ஊட்டிப் போகும் புதிராக உன் வாழ்க்கைச் சரித்திரம்..
கடவுள் எனும் பெயராலே கல்லினைச் சுற்றியது போய்,
கல்விக்கண் திறந்தங்கே
காற்றெங்கும் பரவுகிறோம்..
கருப்பென்று ஒதுங்கியவன் கார்ல்மார்க்கம் பேசி கர்வம் கொண்டெழுகிறோம்,
கடலென சீறுகின்றோம்..
பேதையவள் பெயரளவில் பெண் என்றனறே,
பெருஞ்சாதனைகள் புரிகின்றோம்..
இதனினும் மேலாய் இனியென்ன யான் காண்போம்..
உன் வழி நீ கண்ட கனவெங்கும் நனவாகிக் கொண்டிருக்க, சொச்சமுள்ள நஞ்சினையும் நறுக்கிவிட நகர்கின்றோம்..
நாளும் நீயே துணையாக நெடுந்தூரம் போகின்றோம்..
எல்லாமே உன்னாலே, எதிலும் உன் சாயலே என யாம் கொள்கின்றோம்..
நீயென் கடவுளல்ல,
நீயென் தலைவனல்ல
ஆயினும் பெரும் அங்கம் ஆனாய் என்னில் நீ..
உன் தாடியுதிர்த்த மயிர்ப்பட்ட இடத்தில் தளிர்த்த புற்கள்
நானும், நாங்களும் அவ்வளவே..
அதுவே, அத்திமிரே போதும் நானிங்கு நானாய் நிமிர்ந்து நடந்து இப்பெருவாழ்வைத் தொடர்ந்திட..
எதுகை மோனைகள் எதற்கு, எளிமையாய்ச் சுற்றியக் கிழவனுக்கு.. கவிதைக்குள் உனை அடக்க கம்பனாலும் முடியாது..
'இருளெங்கும் துணை கொள்ளும் கறுமையாகவே நீ' எமக்கு எனதாசைக் கிழவனே, என்றும் நீ இளைஞனே..
நீ வேறா.. நான் வேறா..
யாவர்க்கும் பொதுவானவன்
இவன் ஈ.வே.ரா.
கருத்துகள்
கருத்துரையிடுக