முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலென்று அறிக !!

ஏன் பிடிக்கும்? எதற்காக பிடிக்கும்? என்பதற்கெல்லாம் எவ்வளவு தேடியும் இறுதி வரை விடை கிடைக்கவில்லை எனில், கிடைக்காத அவ்விடை காதலென்று அறிக !!

யாருடனாவது பேச வேண்டும். போலிருக்கிறது !!

யாருடனாவது பேச வேண்டும்.  போலிருக்கிறது.. திடீரென சில சமயங்களில் மனமொரு நீர்ச்சுழலென மாறிவிடுகிறது.. காரணம் ?? கடந்து போன கணம் வரை கண்டறியப்படவில்லை.. யாருடனாவது பேசினால் சுழலில் சிக்காமல் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.. சரி.. ஆனால் யாருடன் பேசுவது ?? என்னுடன் பேச யாருமில்லை என்றெல்லாம் சொல்லிடவியலாது.. தொட்டுவிடும் தூரத்தில், தொலைத்தொடர்பில் என என்னைச் சூழ்ந்திருப்போர் எத்தனையோ பேர் இங்குண்டு.. ஆனாலும் ஏனோ என்னுள் ஓர் அற்ற நிலை.. அப்படியே பேசினாலும் என்ன பேச ?? மௌனம்.. அது மட்டுமே மனதை ஓசைகளின்றி ஊசலாட்டும்.. சில நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது.. எவ்வளவோ சிந்தித்தும் என்னவென்றே புரியவில்லை எனக்கும்.. நடுக்கடலில் அலைகளின் தாளங்களுக்கு ஏற்ப ஆடும் கப்பல், அது எந்த மரக்கிளையின் மீதேறி தன்னை மீட்டுக்கொள்ள இயலும்.. தானே தான் மிதந்தேறி கரை வந்தடையும்.. அவ்வாறே நானும்.. ஆனாலும் கூட, யாருடனாவது பேச வேண்டும் போலிருக்கிறது . .

வாடகை வீடு

இதனோடு சேர்த்து பத்தாவது வீடு எங்களுக்கு.. முன்பிருந்த வீடுகளின் சாயலில் தான் இந்த வீடும் இருக்கிறது.. குழப்பத்தில் அதிர்ஷ்டம் எந்த வீட்டின் கதவுகளை தட்டியதோ தெரியவில்லை.. வாடகை ஏற்றத்தால், வேலை மாற்றத்தால், உயர் படிப்பு நோக்கத்தால், ஆணி அடித்ததால், அடுப்பங்கரை சுவற்றில் படிந்து போன புகையால் என மாறுபடுகின்றன வீடுகள், மாற்றலுக்கான சூழல்களும்.. கரித்துண்டில் கிறுக்கி கணக்கு படித்தது ஒரு வீடு.. பக்கத்து வீட்டின் மரம் ஏறி மாங்காய் திருடி மாட்டிக் கொண்டது மறு வீடு.. வண்டியோட்ட கற்றுக்கொள்வதாய் முழங்கால் முழுதும் தேய்ந்து முடங்கிக் கிடந்தது, இறுதியாக உடனிருந்து இல்லாமல் போனவனின் இருமல் சத்தம் விட்டு விட்டு ஒலித்தது என ஒவ்வொன்றும் ஒரு வீடு‌.. விவரமறிந்த நாளிலிருந்து விட்டுப் பிரிந்தது ஏராளம்.. அத்தனைப் பொருளையும் வாகனத்தில் ஏற்றிய பின் அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் கையசைத்து அழைப்பேன் வரமாட்டேன் என  வம்பிழுக்கும் நினைவுகள் மட்டும் . .

சிலுவைகள் காத்திருக்கின்றன !!

உன்னைப் பார்த்துவிட்டு யாரோ போல் கடந்து செல்லும் கணங்களில் எல்லாம், முன்பு ஒருமுறை அதே சாலையில் என் கை விரல்களை நீ இறுக கோர்த்த போது துடித்ததை விட இருமடங்காகிறது இதயத்துடிப்பு.. இப்போது பற்றிக்கொள்ள, ஊடல் கொள்ள, மகிழ்நதிருக்க, கதறியழ என்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம் உன் நினைவுகள் மட்டுமே.. முதலும் இறுதியுமாய் உன்னை மறந்து போக முடிவெடுத்து நான் உறங்கச் சென்ற மிக நீண்ட அந்த இரவுகளை எல்லாம் கடந்து செல்ல நான் பட்ட பெரும்பாடு யாதென்பதை நீ அறிவாயா ? தட்டப்படும் கதவுகள் அனைத்தும் திறக்கப்படுவதில்லை, கேட்கப்படும் அன்பு எல்லோரிடத்திலும் கிடைப்பதுமில்லை.. ஆனால் சிலுவைகள் மட்டும் காத்துக் கொண்டேயிருக்கின்றன, இப்படியான நினைவுகளை சுமந்து செல்ல !! 

நீயல்ல நான் !!

நீயல்ல நான், நீங்கிச் சென்ற பின்னும் நினைவுகளால் ஏங்க வைப்பதற்கு.. நீயல்ல நான், நகர்ந்து சென்று பிரிந்த பின்னும் உயிர் தகர்த்தி விழச் செய்வதற்கு.. நீயல்ல நான், நித்தம் ஏதோ ஒன்றின் சாயலில் வந்து நிகழ் கணத்தை உறையச் செய்வதற்கு.. நீயல்ல நான், விலகிய பின்னும் உன் எல்லா கவிதைகளிலும் ஓரமாய் ஒளிந்து வாழ்வதற்கு.. நீயற்ற அந்த நானால் இவையெல்லாம் உனக்கும் நிகழ்ந்திருக்குமாயின், மன்னித்து விடு இந்த என்னை !!                                                                              ...

கிட்டியிருக்கிறதா உங்களுக்கு ??

பிரிவின் நிமித்தமாய் காற்றோடு கைக்குலுக்கி கொண்டு விடைபெறும் பூக்களுக்கு தரை வந்து தொடும் கடைசி கணம் வரை கையசைத்து வழியனுப்ப கிளைகள் இருக்கின்றன..குறைந்தபட்சம்வீதியின் கோடி வரை பின்தொடர்ந்து வரும் நாய்க்குட்டியின் கடைசி பரிவாவது கிட்டியிருக்கிறதா உங்களுக்கு ??

கடவுள் எனப்படுபவர் !!

உங்களை வருத்திக் கொண்டு ஏதேனும் செய்யச் சொல்கிறாரா.. உயிர் பலி கேட்கிறாரா.. உங்களின் மொழி தனக்கு விளங்காது என்கிறாரா.. நீங்கள் நினைத்தாலும் தொட முடியாத அளவில் இருக்கிறாரா.. அவருக்கென்று தனியாக ஒரு மெனு தயாரித்து வைத்துக்கொண்டு படையல் போடச் சொல்கிறாரா.. உங்களிடமிருந்து பிடுங்கி தன் சொத்துக்களை மட்டும் பெருக்கிக் கொண்டே போகிறாரா.. உங்கள் படுக்கையறையை நீங்களே அறியாது எட்டிப் பார்க்கிறாரா.. புரிந்து கொள்ளுங்கள், அல்லது முயற்சியேனும் செய்யுங்கள்.. கடவுள் எனப்படும் அவர், நிச்சயம் மனித சிந்தனையில் விளைந்த உயிர் பெற்ற ஒரு பொருளே !!

ஒரு பெருங்காதல் !!

உன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதற்கும், நான் இல்லைன்னாக் கூட நீ தைரியமா இருந்துப்ப என்பதற்கும் நடுவில், ஒரு பெருங்காதல் நிகழ்ந்தும் உடைந்துமிருந்தது !!

அவளும் நானும் !!

அவள் மடியில் நானும், என் மடியில் அவளும் சாய்ந்து கொண்டு ஊர் கதை, உலக கதை எனப் பேசுவதில் கிழவன், கிழவி ஆனோம்..தலையணைக்கு அடித்துக் கொள்கையிலும், WWE என Smacks போட்டுக் கொள்ளும் போதிலும் குழந்தைகள் ஆனோம்..இது தான் நானென்று நான் சொல்லும் முன்னே, அனைத்தும் அறிந்து நடக்கையில் அவளும்,சீரியஸாய் எதும் பேசும் போதிலும் நடுவே சில்மிஷங்களில் செல்லம் கொஞ்சி கோபம் கரைக்கையில் நானும் காதலி, காதலன் ஆனோம்..சிரித்து பேசி சீட்டாட்டம் ஆடுகையிலும், ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டே பயந்தவாறு பேய் படம் பார்க்கையிலும் நண்பர்கள் ஆனோம்..வாழ்க்கையில் அடுத்த நிலை என்ன என்று தவித்துத் திணறும் தருணங்களில் அறிவுரைகள் தரும் ஆசான்கள் ஆனோம்..தலைகோதி நெற்றியில் முத்தம் வைத்து தூங்க வைத்துக் கொண்ட தருணம் கணவனும், மனைவியும் ஆனோம் !!

உள்ளுக்குள் ஏங்கித் தவிப்பதும் உண்மைக் காதலே !!

பேசவே கூடாதென முடிவெடுத்த பின்னும், 'நீயாக பேசமாட்டாயா' என உள்ளுக்குள் ஏங்கித் தவிப்பதும் உண்மை காதலின் ஒருவித வெளிப்பாடேயாகும் !!

எப்போது வருவாய் நீ !!

எப்போது வருவாய் நீ ?? விழிகளில் நீர் தளும்ப யாரிடமோ தொலைபேசியில் இதே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.. நானோ, பிறரோ கவனிப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எந்த அவகாசமும் இல்லை அவளுக்கு.. எப்போது வருவாய்.. எனக் கேட்பதைக் தவிர இக்கணம் அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து தெரிந்துகொள்ள எதுவுமே இல்லை.. அவள் பிடிவாதமாக இருந்தாள்.. மன்றாடுதலுடன் இருந்தாள்.. அந்தக் கூட்டத்திலும் தனிமையாக இருந்தாள்.. எந்தக் கணமும் உடைந்து அழக் கூடியவளாக இருந்தாள்.. எத்தனை யுகங்களாய் இதே குரலில், இதே ஏக்கத்தோடு, இதே கண்ணீருடன், இதே கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று தெரியவில்லை.. வர வேண்டிய அந்த யாரோ ஒருவர் வராமலேயே இருந்துக் கொண்டிருக்கிறார் இன்னமும் !!