முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் செய்யாதே என் கணவா !

காதல் செய்யாதே என் கணவா, தீராத காதல் செய்..

இளமையின் மொத்தமாய் என் கண்கள் எழில் தொடுக்க, அதில் பித்தாகி நீ மூழ்கி எனை காதல் செய்யாதே என் கணவா..

துயர்படும் தருணங்களில் எல்லாம் துளிர்விட்டு எழும் கண்ணீர்த் துளிகளை உன் கரங்களால் நீயள்ளி உன் உயிர் ஊற்றி எந்தன் துயர் மாற்றும் காதல் செய் . .


இளமை துள்ளும் சோலையாய் கனவுகளின் வாழ்விடமாய் கனிந்து நிற்கும் என் மனதினை காதல் செய்யாதே என் கணவா..

கனவுகளைத் தொலைத்த வெறுங்காடாய், வாழ்வியல்கள் விளையாடும் மைதானமாய், பொழுதொரு மாற்றமும் நொடிக்கொரு ஏமாற்றமுமாய் காணும் என் மனத்தினை காதல் செய் . .


வெள்ளிக் கொலுசுகள் சறுக்கு மரமாடும் வாழைத்தண்டாய் செழித்து நிற்கும் என் மென் பாதங்களை காதல் செய்யாதே என் கணவா..

வாழ்வின் சுழற்சியால் வனப்பிழந்து வலிகள் தாங்கியதன் அடையாளமாய் வரிகள் தாங்கி நிற்கும் என் பாதங்களை காதல் செய் . .


பருவ வயதின் நெளிவுகளைப் பருகி உடல் மொய்க்கும் காதல் செய்திடாதே என் கணவா..

பிரசவித்து உடல் பருத்து வளைவுகளை நான் தொலைத்த பின்னும் என் தேகத்தை ஓயாமல் காதல் செய் . .


முதலாம் அத்தியாயத்தில் முத்தான வார்த்தைகளைக் கொத்தாக உதிர்க்கும் இருவரிக் கவிதையான என் செவ்விதழ்களை காதல் செய்யாதே என் கணவா..

அத்தியாயங்கள் பல கடந்தபின் விரக்தியில் நான் உதிர்க்கும் கடுஞ்சொற்களையும் கொஞ்சமும் சலிப்பின்றி அள்ளிக் காதல் செய்திடு என் கணவா காதல் செய்திடு .‌ .


வனப்புகளை காதல் செய்வது மட்டுமே உலக நியதியெனில் வா நியதிகளைத் தாண்டியொரு காதல் செய்வோம்‌ !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!