முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவன் - கவிதை

அத்தனை நெரிசல் தாங்கும் பேருந்திலும் அறியாதவள் தேகம் உரசிடாது நிற்கும் அவன் - கவிதை..

அருகேயவள் ஆடைத் திருத்தங்களில் அனிச்சையாய் திசை திரும்பும் அவன் - கவிதை..

அரவமற்ற தனிமை நெருக்கத்திலும் அத்துமீறா ஆளுமை காத்து நகைக்கும் அவன் - கவிதை..

ஆர்ப்பரிக்கும் ஊடல் பின்னே அரவணைத்து முத்த மிடும் அவன் - கவிதை..

வெளிப்படையாய் பேசிவிட்டு வெட்கப்படும் தருணங்களில் அவன் - கவிதை..

வேடவர் கை குத்துப்பட்டு வெள்ளந்தியாய் சிரிக்கையிலும் அவன் - கவிதை..

வெண்ணிலவை தள்ளி வைத்து பெண்நிலவை ரசித்திடுகையில் அவன் - கவிதை..

தோழியவள் தோள் சாய தொல்லையிடா கணங்களிலே அவன் - கவிதை..

தேநீர் நேரக் கதைகளிலே தேவதையவள் கண் திருடுவதில் அவன் - கவிதை..

சில்மிஷங்கள் செய்கையிலே சிணுங்கல்களில் லயிக்கையிலும் அவன் - கவிதை..

கனம் கூடிய கணங்களிலே கண்ணீரை மறைத்து விடும் அவன் - கவிதை..

பிணி தன்னை ஏந்தையிலும் பிடி தளர்த்தா நேசமிடும் அவன் - கவிதை..

பிஞ்சுவிரல் தீண்டிடுங்கால் பிள்ளையதன் சித்திரமாய் அவன் - கவிதை..

செல்ல மகள் வாடிடுங்கால், செத்து கணம் மீண்டிடும் அவன் - கவிதை..

பெற்றவனின் மனமறிந்து உள்ளமதை அடக்கிடுங்கால் அவன் - கவிதை..

உச்சி வெயில் வேளையிலும் மெய்வருத்தி கூலி பெறும் அவன் - கவிதை..

நட்டநடு சாமத்திலும் சாமியெனக் காத்திடுங்கால் அவன் - கவிதை..

சினங்கொட்டித் தீர்க்கையிலும் சீர் செய்து பார்க்கையிலும் அவன் - கவிதை..

பழைய சோறு தானுண்டு பழரசமதை பகிரையிலும் அவன் - கவிதை..

கால் கடுக்க நடை போட்டு உண்டியதை நிரப்பிடுங்கால் அவன் - கவிதை..

வாஞ்சையதை புதைத்தங்கே வலியதனில் மறத்துப்பின் வாய் மொழியும் அவன் - கவிதை . ‌.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!