முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு பொய் போதும்!

எனக்கென நீ உதிர்க்கும் சொற்கள்.. எனக்கென மலரும் உன் இதழோரப் புன்னகை.. எனக்கென நீ சிரமத்தோடு சூடிக்கொள்ளும் அந்த சிறிய ஒப்பனை.. எனக்கென வெளிப்படும் உன் வெட்கம்.. எனக்கென கொட்டிடும் அந்தக் கோபம்.. எனக்கென நீ தந்து போன வலிகள்.. எனக்கென என்பதில் எல்லாம் நீ கஞ்சத்தனங்கள் செய்ததே இல்லை எப்போதும்.. எனக்கென என்பதுனக்கு அத்தனை சுகம், அத்தனை பிரியம், அத்தனை பிடித்தம்.. உனக்கென என்பதை எல்லாம் என் எல்லாவற்றோடும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன் நான்.. மீண்டும் மீண்டும் இந்தக் காலம் ஒரு பாடலிலோ, ஒரு பெயரிலோ, ஒரு பேருந்திலோ, ஒரு இரவிலோ உன்னை என்னிடம் சேர்த்து விடுகிறது எனக்கென.. அதே காலம் என்னிடமிருந்து உனக்கென எதுவும் சேர்த்ததா ?? பதில் வேண்டாம்.. ஒரே ஒரு பொய் சொல் அது போதும் இப்போதைக்கு எனக்கென !!

என்னையும் யோசி !

என்னதான் வேண்டும் உனக்கு? உள்ளூர கண்கள் ஊடுருவ என் நேர் நின்று கேட்கிறாய்.. ஒரு போதும் நீ நான் கேட்பதை தரப்போவதில்லை என எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்.. ஏனெனில் இங்கு நீ எனக்காகவென யோசித்ததை விட என்னையன்றி‌ யோசித்த மற்றவைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.. கண நேரமும் சிந்திக்காது ஒவ்வொன்றுக்கும் காரணங்களை அடுக்கி விட்டு கடமை முடிந்தது என கண்டு கொள்ளாமல் செல்லும் நீ, கண நேமேனும் சிந்தித்திருக்கலாம் காரணங்கள் தாண்டி என்னையும் கொஞ்சம்.. சரி இருக்கட்டும்.. இந்த கணம் ஒரு பட்டாம்பூச்சியாக மாறி என்னை அணைத்துக்கொள் உனக்குள் இறுதியாக.. கொஞ்சம் எனையும் பறக்க வை உன் வானத்தில்.. பிறகு, உன் விருப்பம் !!

பிரிந்து போவோம் வா..

இந்தப் பிரிவு போதுமானதாக இல்லை நம் காதலுக்கு... இன்னும் பிரிந்து போவோம், தொலைந்து போவோம் மிக தூர தூரமாய்.. உன் தூது எதுவும் என்னை சேர முடியாத தூரம், என் நினைவுகள் நினைத்தாலும் உன்னை அடைய முடியாத தூரம்.. நான் யாரென்று நீ மறந்து போகின்ற தூரம், நீ யாரென்றே நான் அறியாது போகின்ற தூரம்.. இவ்வாறு மிக மிக தூரங்கள் பயணித்துக் களைத்த பிறகு, இளைப்பாற எங்கேனும் இப் பிரபஞ்ச பெருவெளியில் மீண்டும் ஒரு மரத்தடி நிழலிலோ, மலையடிவாரத்திலோ முதல் முறை சந்திப்பது போல் சந்தித்து கொள்வோம் வா.. மீதி அத்தியாயங்களை எல்லாம் அதன் பிறகான காதலில் எழுதிக் கொள்ளலாம் !!