ஏதாவது தப்புப் பண்ணிட்டு ஆங்கிலத்தில் Sorry கேட்க எப்போதுமே மனது தயங்குவதில்லை.. அதே வேளையில், தமிழில் மன்னிப்பு கேட்க சற்றே தயங்குகிறது!! காரணம், ஆங்கிலம் மேலோட்டமானது.. தமிழ் உயிரோட்டமானது!!
நாம் யாரும் எதிர்பார்த்திடா ஏதோ ஒரு புள்ளியில் வேகமெடுக்கிறது அல்லது மந்தமாகிறது அல்லது மொத்தமும் சூன்யமாகிப் போகிறது இந்த வாழ்க்கை! எந்தப் புள்ளியிலும் நம்மை நாம் தொலைத்து விடாமல் இருப்பதும், எந்தப் புள்ளியும் நம்மைத் துளைத்து விடாமல் இருப்பதுமே, நாம் நம் வாழ்க்கையில் இருந்து தொலைந்து போகாமல் இருப்பதற்கான வழி!!
தெரு குழந்தைகள் எட்டி பறிப்பதைப் பார்த்த அந்த வீட்டுக்காரர், பூக்களை திருடுகிறார்கள் என்று மதில் மேல் ஏறும் கொடிகளை எல்லாம் வெட்டி போடுகிறார்.. அவர் எத்தனை முறை வெட்டினாலும் மறுபடி வளர்ந்து மதிலுக்கு அப்பால் சில பூக்களை நீட்டிக் கொடுக்கிறது அந்தச் செடி!!
நீ அறியாத கணங்களில் உன்னை ரசிக்கும் பொழுதுகளில் எல்லாம் குட்டி பூனையாகிறேன்! உன் மடியில் தவழ்ந்து, என்னைத் தழுவா உன் கைகளுக்கு ஏங்கி பின் உன் கொஞ்சல்களில் மயங்கும் தருணங்களில் நாய்க் குட்டியாகிறேன்! உன் மேனியில் அங்காங்கே துள்ளி விளையாடி, வரிகளால் வர்ணங்கள் செய்யம் பொழுதெல்லாம் அணிலாகிறேன்! உன் செல்ல அதட்டல்களில் பயம் கொள்ளும் தருணம் அசடுவழியும் ஒரு குழந்தையாகிறேன்! நீ கோபம் கொண்டு சிவந்து போகையில் எல்லாம், உன்னைக் கொஞ்சி பேசும் கிளியாகிறேன்! எங்கும் எவரிடத்தும் உன்னை விட்டுக் கொடுக்காது நிற்கும், உனக்காய் இருக்கும் தருணங்களில் உன்னவனாகிறேன்!!
பிறகு வேறு எப்படித்தான் இருக்க வேண்டும் இந்தக் காதல் ?? ஆணுக்கென்றால் அப்படி, பெண்ணுக்கென்றால் இப்படி என்ற எந்தவித வரையறுத்தல்களும் இல்லாமல், விளக்கங்கள் தேவைப்படாமல், கொக்கிகள் இல்லாமல், எல்லா கதவுகளும் எப்போதும் திறக்கப்பட்டு, அவமான உணர்வும் வெட்கமும் இல்லாமல், நிர்வாணமாய்.. எந்தப் பூச்சும் இல்லாமல் சுத்தமாய் மிக பரிசுத்தமாய்!!
இருண்ட தனித்த குகை தான் வசிக்கப் பிடித்திருக்கிறது இப்போதெல்லாம்.. ஆனாலும் எப்போதேனும் விரிசல் வழி வந்து விழும் அந்த சூரியக் கதிர்களை ஆனந்தத்துடன் அள்ளிக் கொள்ளவும் மனம் விழைந்து கொண்டே தானிருக்கிறது ஒரு ஓரமாய்!!
அன்பை கண்டு கொள்ளாதோரிடம் அடிக்கடி நான் இருக்கிறேன் என்னைக் கவனி என்று தெரியப்படுத்திக் கொண்டே இருக்காதே.. திடும்மென்று நீ ஏற்படுத்திக் கொண்ட அந்த அமைதிதான் அவர்களை சலனப்படுத்த வேண்டுமே தவிர உன் கூச்சல் அல்ல! அமைதியான பின்னும் எந்த சலனங்களும் இல்லையென்றால், விளக்கங்கள் கேட்பதைக் காட்டிலும் சிறந்தது விலகிக் கொள்வதே என்றறிக!!