முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜென்சி அக்காவின் அழுகை!!

பிரபா அண்ணாவுக்கு ஜென்சி அக்காவை ரொம்ப பிடித்திருந்ததால், அக்காவுக்கும் அண்ணாவை ரொம்ப பிடித்திருந்ததால், கல்யாணத்தின் முதல் நாள் இரவு அக்கா காணாமல் போய் விடுவாள் என்று அம்மாவும் அத்தைகளும் சித்தியும் அவளின் அறையிலேயே காவலர்களாய் மாறிப் போயிருந்தனர்.. இரவெல்லாம் கேட்டு கொண்டே இருந்த அந்த அக்காவின் அழுகையின் இடையே உறங்கி போனேன் நான் புரியாத வயதில்.. இப்போதெல்லாம் உறக்கமின்றி எனக்காக அழும் இரவுகளில், அக்காவுக்கும் சேர்த்தே அழுகிறேன்!!

க்ரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச!?

ஒருத்தியை  காதலித்தேன் நான்.. அவளும் காதலித்தாள் என்னை.. நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது எங்கள் காதலும்.. திடீரென சண்டை போட்டாள், வம்படியாக என்னைத் தவிர்த்தாள், இறுதியாக ஒருநாள் ஏனென்றே தெரியாத ஒரு பிரேக் அப்பை பரிசளித்தாள்.. எவ்வளவோ கெஞ்சினேன்.. எதற்கு பிரேக் அப் என்று கேட்டு மன்றாடினேன்.. கொஞ்சமும் இரக்கம் காட்டாதவள், க்ரீஸ் டப்பாவை எட்டி உதைப்பது போல் எட்டி உதைத்தாள் என்னையும் என் காதலையும்.. சமீபத்தில் தான் கேள்விபட்டேன், அடுத்ததாய் வந்த அவளது காதலன் அவளை கைவிட்டு விட்டதாக‌.. காதல் தோல்வியின் வலி புரிந்த நான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினேன்.. உடைந்து அழுதாள், அவள் கண்ணீர் மொபைல் வழியாக என் இடது காதில் வடிந்தது.. அவள் அழுகையில் நானும் சோகமானேன்.. என் மனதின் மூலையிலிருந்த சைத்தான் ஒன்று வலது காதுக்குள் வாய் வலிக்க கத்தியது.. அவளிடம் கேள், கேட்டு விடு என்று கதறியது.. என்னவென்று தெரியுமா? "ஆமா நீ க்ரீஸ் டப்பாவை  எப்படி உதைச்ச"

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!

உனக்காக மட்டும்!!

எங்கிருந்தோ உள் புகுந்து ஊடுருவுகிறது இல்லாத அந்தக் கடவுள் நம்பிக்கை, உனக்காக வேண்டிக் கொள்கையில் மட்டும்!!

காத்திருப்பு மட்டுமே தெரியும்!!

உதிர்ந்து கொண்டிருக்கிறது, நாட்கள் ஒவ்வொன்றாக! உதிர தொடங்கி விட்டன, கனவுகளும் ஆசைகளும் கூட! எதற்காக இந்த காத்திருப்பு என்றும், எத்தனை காலமென்றும் கூட மறந்து போகலாம் எனக்கு, அத்தனைக்குப் பின்னும் கூட நான் காத்து கொண்டே தான் இருக்கிறேன், இருப்பேன்! இப்போதெல்லாம் பழகிவிட்டது காத்திருப்பு எனக்கு.. வேறு என்ன செய்வதென்று தெரியாது.. தெரிந்ததெல்லாம் அது மட்டுமே இப்போது! காத்திருக்கிறேன்!!

ஆகச்சிறந்த போதை!!

யாரோ எங்கோ நம்மை  முழுதாய் இன்னமும் ரசித்துக் கொண்டிருப்பார்கள், கொண்டாடிக் கொண்டிருப்பார்கள், தீர்க்கமாய் காதலித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்ற இறுதித் துளி நம்பிக்கையை விட ஆகச் சிறந்த போதை வேறென்ன இருந்து விடப் போகிறது இந்த உலகில்!!

தொலைவது நிச்சயம்!!

எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை இதுவரையில்.. தேடலின் முடிவில் எதையேனும் தொலைத்திருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்!!