முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் கவிஞனான தருணம்😌

யோசித்துப் பார்க்கிறேன்.. மொத்தமும் கொட்டிப் போய் உனக்கே உனக்காகவெனவே மிஞ்சியிருந்த அந்த ஒற்றைப் பூவை, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, பாதங்கள் ஒருசேர உயர்த்தி எட்டிப்பறிக்க நீ எத்தனித்த அத்தருணத்தை அருகாமையில் நின்று தரிசித்த அந்த நேரத்தில் தான், நிச்சயம் நான் கவிஞனாகியிருக்க வேண்டும்!!

அதுவே பெருந்துயரம்!!

யாரையாவது காதலிப்பது என்பது ஒரு ஆறுதல்.. யாரையும் காதலிக்காமலிருப்பது ஒரு வகை நிம்மதி.. யாராலாவது நாம் காதலிக்கப்பட்டோம் அல்லது காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது பெரும்போதை.. யாராலும் இறுதிவரையில் காதலிக்கப்படாமல் போவதுதான் கடுந்துயர்!!

புடவை அணிந்த பட்டாம்பூச்சி🦋💙

ஆண்டு முழுதும் சுடிதார் தேவதையாய் சுற்றி திரிந்த அவளுக்கு, திடீரென ஓர் ஆசை துளிர்விட்டது கடைசி நாளில் புடவை பட்டாம்பூச்சியாய் கல்லூரியை சுற்றிவர.. அலமாரி முழுதும் அரை நாள் தேடித் தேடி தேர்ந்தெடுத்ததில் அம்மாவின் புடவை ஒன்று மயில் கலரில் மாட்டியது.. அதில் ஆரம்பம் எது முடிவு எது என தெரிந்து கொள்ளவே அரை நேரம் தீர்ந்து போயிருந்தது.. அம்மாவின் உதவியோடு அதை ஒருவழியாய் அணிந்து முடிக்கவே அரை யுகம் ஆகிப் போன நிலையில், புடவையை அவள் அணிந்து கொள்ள அழகோ அவளை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தது.. இடை தெரியாமல் மறைக்க தேடினாள் காப்பூசி ஒன்று.. மறு பிறவியென்றால் எப்படியாவது காப்பூசியாய் பிறக்க கடவுளிடம் வேண்டி கொண்டிருந்தது அவள் வீட்டு கண்ணாடி.. கல்லூரி வாசலை நெருங்க நெருங்க வார்த்தைகள் இதழ் நழுவ, இடை நழுவிய புடவையை இழுத்து பிடித்தது பூவை அவளின் விரல்கள்.. இல்லாத இடையை வேறு வழியின்றி இறுக்கி பிடித்து கொண்டது அந்த புடவையின் விரல்கள்.. சிறகை மறந்த அந்த வண்ணத்துப்பூச்சி புடவை அணிந்து பொறுமையாக வாசலோரம் வலம் வருவதை காணும் வரை, கல்லூரியின் கடைசி நாளை எண்ணி எந்த ஆணும் வருத்தப்பட்டதாய் தெரியவில்லை!!

வக்கற்றவர்கள் தானே நாம்!!

ஆயுள் முழுவதுக்குமான அன்பும், ஆசைதீர காதலும், அடிக்கடி அணைத்துக் கொள்ள அவனும் அல்லது அவளும், இதெல்லாம் வேண்டும் தான் எல்லோருக்கும்.. ஆனால் குறைந்தபட்சமாக ஒரு நாளாவது நம்மை மறந்து நாம் உறங்கிப் போகும் வரை அலுக்காது தலை கோதிவிடும் ஒரு கை! அதற்கு கூட வக்கற்றவர்கள் தானே நம்மில் பலரும்!!

நானாக கூட இருந்திருக்கலாம்!!

உச்சி வெயிலில் உள்ளங்கால் நனைக்கும் வியர்வையில், பாலைவன தேசத்துக்காரன் போல வறண்ட கண்களோடு வாழ்ந்து வெறுத்த நடையோடு, கையில் Certificate File உடன் கண்ணெல்லாம் தீராத கனவுகளோடு, எவனோ ஒருவன் வேலை தேடி அலைந்து திரிவதை நகரத்தின் எங்கோ ஒரு மூலையில் நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால், யாருக்குத் தெரியும்.. அது நானாக கூட இருந்திருக்கலாம்!!

ஆதித்த கரிகாலன் எனும் காதல் பித்தன்!

எத்திசையும் நடுங்கிட ஒத்தையிலே போர் புரிந்து, பல தலைகளை கொய்து வந்தவன் அவன்.. ஏனோ வெள்ளைப் பூ அவளின் மீளா மாய வலையில் சிக்கி, காதல் பித்தம் மொத்தமாய் தலைக்கேறி, தலை பிய்த்துக் கொண்டு, பித்தம் நித்தம் குறைய வேண்டி, கள்ளும் பாட்டும் இரத்தமும் சதையும் எனக் கேட்டவன் இப்போது, காஞ்சியிலே நிற்கிறான் எஞ்சிய அவளின் கொஞ்சம் நினைவுகளோடு! அவளால் உயிர் விட்டான் என்பது மன்னனின் வரலாற்றில் விழுந்த மண் என ஊர் தூற்றினாலும், அவளால் உயிர் விட்டான் என்பதுவே அவனது இத்தனை ஆண்டு காலத்தின் இறுதிபட்ச இன்பமாயும் ஆறுதலாயும் இருந்திருக்கும் அவனுக்கு!!

அவள் நினைவுக்கு மட்டும்..

அத்தனை சுனாமி உள்வைத்துக் கொண்டு, அமைதியாய், அலைகளாய் ஆரத்தழுவி ஈரம் செய்து அனாதியாய் நீண்டு கரை கிடப்பதெல்லாம்.. அவள் நினைவுக்கும் அந்தக் கடலுக்கும் மட்டுமே பொருந்தும்!!

நீயாக இருக்கக் கூடாதா💔

என் கவிதைகளை நீ ரசிக்காமல் போனாலும் பரவாயில்லை கண்மணி.. ஆனால் தயவுசெய்து அதன் அர்த்தம் கேட்டு அடிக்கடி என்னை காயப்படுத்தாதே! என்னுடைய கவிதைகளுக்கு எப்போதும் உன்னைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை!!

என் கவிதைகளின் அர்த்தம்..

என் கவிதைகளை நீ ரசிக்காமல் போனாலும் பரவாயில்லை கண்மணி.. ஆனால் தயவுசெய்து அதன் அர்த்தம் கேட்டு அடிக்கடி என்னை காயப்படுத்தாதே! என்னுடைய கவிதைகளுக்கு எப்போதும் உன்னைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை!!

பழைய நம்மை எங்கே தேடுவது??

பழைய உன்னைத்தான் எனக்குத் தெரியும்..   புதிய உனக்கு எதுவெல்லாம் பிடிக்கும்,  எதுவெல்லாம் பிடிக்காமல் போனதென தெரியாது எனக்கு.. புதிய உன்னிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை எனக்கு.. பழைய உன்னிடம் பேசுவது போல  புதிய உன்னிடம் பேசலாமா என்று கூட தெரியவில்லை பழைய உன்னின் பாதங்களை ஏற்றி தயக்கமின்றி நெஞ்சில் வைத்துக் கொள்ள முடிந்த என்னால், புதிய உன்னிடம் தன்மானத்தின் தயக்கங்கள் அதிகம் கொண்டு பின்வாங்குகிறேன்.. மீட்டுக் கொணரவே முடியாத ஆழத்தில் இந்தக் காலத்தின் நடுவே தொலைத்து விட்டேன் உன்னை நான் எப்படியோ.. கிட்டவே இருந்தும் என் கையை கூட எட்டிப் பிடிக்க முடியாத தூரத்திற்கு நீயும் சென்றுவிட்டாய், நானும் விட்டுவிட்டேன் ஏனென்று தெரியாமலே.. அன்று அத்தனை ஆசை வார்த்தைகளால் அழைக்க முடிந்த அந்த உன்னை, இன்று டி என்றழைத்ததற்கே மன்னிப்பே கேட்கத் தோன்றுவதெல்லாம் காலத்தின் கோடூமையே அன்றி வேறென்ன.. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன், நாம் நம்மை இனி கண்டுகொள்ளவே முடியாது தேவி!

மிச்ச நேரத்தையும் முத்தமிட்டு கழிக்க தயார்!!

யாரும் அறிந்திடாது, எவர் கண்ணுக்கும் புலப்படாது, இத்தனை நாளாய் நினைவின் பேழைக்குள் நீ பொதிந்து வைத்திருந்த வடுவாகிப் போன பழைய காயமொன்றை என்னிடம் திறந்து காண்பிக்கிறாய் முதல் முதலாக.. தழும்பை வருடிக் கொடுப்பதால் எந்த வலியும் ஆறப்போவதில்லை, எதுவும் மாறப்போவதில்லை - தெரியும் எனக்கு.. இப்போது இங்கே உன்னோடு இருக்கும் நான் அப்போதும் இருந்திருந்தால்  இதனை ஆகவிட்டிருக்க மாட்டேன்.. அது தெரியும் உனக்கு.. அதனை அறிவிக்கத் தான் என்னிடம் அந்த ஆறாத் தழும்பை காண்பிக்கிறாய்.. அதனை ஆமோதிக்கத்தான் இப்போது நான் முத்தமிடுகிறேன் அந்த தழும்பின் மீது.. இதோ என் இதழ்களின் ரேகைகளால் இப்போதைக்கு மூடி விடுகிறேன் அதை.. மீண்டும் வெளித் தெரிவதாய் இருந்தால் சொல், மிச்ச நேரத்தையும் அங்கு முத்தமிட்டே கழிக்கிறேன்!!

இன்னமும் வரும் அந்த வாசம்!!

மேல் வீட்டு மாலா அக்காவின் மீது வந்த அந்த முதல் காதல் கூட மறந்து விடும் போலிருக்கிறது.. ஆனால் அதற்குக் காரணமான அவள் குளித்தப்பின் காற்றின் வழியே வந்து நம்மை கட்டிப் போடும் அந்த சோப்பும் மஞ்சளும் கலந்த வாசத்தை மட்டும் இன்றுவரை மறக்க மறுக்கிறது மனம் எவ்வளவு முயன்றும் !!

உறங்கிக் கிடக்கிறது ஒரு காதல்!!

சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் விலங்கிடப்பட்ட ஓர் ஆயுள் கைதியாய் அனைவரது உள்ளத்திலும் அமைதியாய் உறங்கிக் கிடக்கிறது, ஆத்மார்த்தமான ஒரு காதல் !!