முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

யாரும் அறியாமல் நனைகிறேன்!

இதே ஊரில் இங்கே எங்கயோ தான் இதே மழையை நீயும் ரசித்துக் கொண்டிருக்கக்கூடும்.. ஒரு வேளை கொஞ்சம் நனைந்திருக்கக்கூட வாய்ப்புகள் நிறைய உண்டு.. ஆகவே தான் விடாமல் பெய்யும் இந்த நள்ளிரவு மழையில் நானும் என்னை நனைத்துக் கொண்டிருக்கிறேன் யாரும் அறியாமல்!!

மரணம் என்பது..

உடல் விட்டு உயிர் நீங்குவது தான் மரணம் என்று இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன் எல்லாரையும் போலவே நானும்.. ஆனால் கண்மணி, உண்மையில் மரணம் என்பது அதை விட எத்தனை கொடுமையானது!!

இப்படிக்கு, எங்கிருந்தோ ஓர் ஜன்னலோரவாசி!!

சொந்தமாய் ஒரு வீடு என்பதெல்லாம் பெரும்பான்மையானோரின் பேராசைக் கனவாகிப் போயிருக்கையில், ஒருவேளை கனவுகள் தாண்டி கற்கள் கொண்டும் வீடு கட்டுவதாக இருந்தால் தயவுசெய்து பெரியதொரு ஜன்னல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கேசம் கலைத்துப் போட்டு விளையாட காற்றோட்டம் அங்கிருக்கும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.. உங்களுக்கென ஒரு ஜன்னலோரம் இருப்பின் உலகின் எந்தவொரு துயரையும் நீங்கள் கடந்துவிடலாம் அல்லது மறந்துவிடலாம் என்பதற்கு, தாய் மடியென அதன் கம்பிகளில் தலை சாய்த்து தன்னைத் தொலைத்தோர் ஏராளம் சாட்சியுண்டு.. ஒரே ஒரு நிபந்தனை, அந்த ஜன்னலை சாத்திவிட்டு மீண்டும் திறப்பதற்கு முன் மனம் விட்டு அழுதிருப்பது மட்டும் முக்கியம்!!

அவள் கையெழுத்து!!

அங்குமிங்கும் அறைக்குள் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கையில் சட்டென்று சிக்கியது அலமாரிக்குள் ஆழ்ந்து போன புத்தகம் ஒன்று.. புத்தகத்தை தூசு தட்டுகையில் எனக்குள்ளும் ஞாபகப் புழுதி கிளம்புகிறது மெல்ல.. தானாய்‌ கை தேடிச் சென்றடைந்த இடம் மூன்றாம் பக்கத்தில் காகிதத்தோடு காகிதமாய் பதிந்து போன அவளது கையொப்பம்.. கோணலான கையெழுத்து தான்‌‌ அவளுக்கு, அவளைப் போலவே அதுவும்.. இருந்தும் அச்சிட்ட‌ எழுத்துக்கள் கூட அவள்‌ பெயருக்கு அருகினில் நிற்க முடியாது.. எதையோ தேடத் தொடங்கிய நான் அவளின் அந்த கையெழுத்துக்குள் என்னை தொலைக்க தொடங்குகிறேன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக.. என்ன செய்யட்டும்.. சில விஷயங்களை எவ்வளவு முயன்றாலும் முற்றிலுமாக அழிக்கவோ, மறைக்கவோ முடிவதில்லையே.. எங்கு தேடிப் போய் நீங்கள் எப்படி ஒளிந்து கொண்டாலும் அந்த ஞாபகச் சிறகுகள் காற்றில் படபடத்துக் கொண்டே தான் கிடக்கின்றன!!

கிடைக்குமா ஒருமுறையேனும்??

இந்த தூரங்களையும் தடைகளையும் கடந்து, ஓடி வந்து உன் கைகளுக்குள் பத்திரமாய் சேர்ந்து, கொஞ்ச நேரமேனும் இந்த உலகம் மறந்து உறங்கிப் போக வேண்டும்!!

Company Calls கடுப்புகள் 🤦🏻‍♂️

இதோ இந்த அலைபேசி இசைத்திட நீதானோ என்று ஓடி வருகிறேன் ஆவல் அடங்காமல்.. மின்னல் வெட்டி, மின்சாரமாய் பரவி, வானவில் நிற வண்ணத்துப்பூச்சிகள் வயிற்றினுள் வட்டமடித்து மேலேறி வரும் வேளையில், அவற்றை வெறும் கரும்புகையாகி கக்க விடுகிறான் இந்த கம்பெனிக்காரன்!!

பலவீனமாகி விட்டேன் நான்🚶🏻‍♂️

வழக்கமாக கீறுகிற அதே கத்திதான் கீறுகிறது‌ இன்றும்.. வழக்கமாக படுகிற அதே இடத்தில்தான் பட்டு வலிக்கிறது.. இந்நேரம் பழகியிருக்கவேண்டும் தான், இருந்தும் ஏனோ சில நாட்களில் வழக்கத்தைவிட அதிகமாக வலி கொடுத்து ரத்தம் கசிகிறது.. கொஞ்சம் பலவீனமாகிவிட்டேன் போலும் நான்🚶🏻‍♂️

அவள்‌ பெயர் ராணி!!

துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்.. கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு.. முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய்‌ உறங்குகிறாள்‌ அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து‌ அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும்‌ சேர்த்து.. கண்டும்‌ காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை..  இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!

அந்த காலத்து School Love♥️

ஐந்தாறு மாதங்கள் போராடி அடித்து பிடித்து எப்படியோ Attendance register-இல் இருந்து அவள் தொலைப்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து, 'எப்ப call பண்ணிணா அவ எடுப்பா, அவள் குரல் கேட்டாலே போதும்' என எண்ணியபடி, அலைபேசியில் அந்த எண்களை அழுத்தும் போது மனதில் எழும் அந்த என்னவென்றே தெரியாத உணர்வு சங்கமம் தான் அப்போதைய பள்ளிக் காதலின் இலக்கணம்!

எரிகிறது என் ஆன்மா!!

இந்த பின் அந்தி இரவுகளில் உன் நினைவுகளை போர்த்தியபடி நான்‌ மட்டும் கிடக்கிறேன்‌ இங்கே.. நீ இட்டு போன ஒவ்வொரு முத்தத்தின் உஷ்ணத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!

என் சரியான தவறு நீ!!

என் தவறுகளில் மிக சரியானதுமாய் மிக பிடித்தமானதுமாய் நீ மட்டுமே இருக்கிறாய் எப்போதும்!!

காரணம் கூட தெரியாமல் தொலைஞ்சு போறதோட வலி💔

தொலைத்தவர்கள் வேண்டுமானால் தேடாமல் இருக்கலாம்.. ஆனால் தொலைந்த ஒவ்வொருவருமே தேடிக் கொண்டேதான் இருக்கின்றனர் இன்னமும் தாங்கள் தொலைக்கப் பட்டதற்கான காரணத்தை!!

பறவை மீது பொறாமை எனக்கு!!

காற்றின் திசையை முன்கூட்டியே அவதானித்து இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து இன்பமாய் பறக்கத் தயாராகும் ஒரு பறவையைப் பார்த்து பொறாமைப் படுவதைத் தவிர, இத்தனை வருட இந்த மானுட வாழ்வில் இந்த ஆறாம் அறிவைக் கொண்டு பெரிதாக நான் எதையும் செய்ததில்லை, செய்ததாக நினைவுமில்லை.. அதோ அந்தப் பறவை எவ்வளவு உயரத்தில் மிதந்துகொண்டே பறக்கிறது பாருங்களேன்!!

அன்பின் நிலையும், நிதர்சனமும்!!

ஒருவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதாய் மற்றொருவரும், அந்த மற்றொருவர் வந்த தடம் அழிந்து அதை நிரப்ப இன்னொருவரும் என வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் இந்த வாழ்க்கையில்.. ஆனால் அந்த இடம் மட்டும் இன்னும் வெறுமை தந்தவரின் நிஜத்தை மட்டுமே தாங்கி நின்று கொண்டிருக்கிறது என்பதே அன்பின் நிலையும், நிதர்சனமுமாய்!!

உன்னிடம் மட்டும் மறந்தேன்🤦🏻‍♂️

நீ தின்று வீசிய சாக்லேட் கவர்; உன் கூந்தல் ஏறி உதிர்ந்த ரோஜா இதழ்; நீ கடித்துக் கடித்தே கலரும் வடிவமும் மாறிப் போன அந்த பேனா மூடி; உன் பெஞ்ச்சில் நான் கிறுக்கிய நமது பெயர்; உனக்குத் தெரியாமல் உன்னிடமிருந்து நான் உறுவிய உன் பூப்போட்ட கைக்குட்டை; இவற்றுக்கெல்லாம் சொன்ன, இன்னமும் சொல்லிக்  கொண்டேயிருக்கும் என் காதலை, ஏனோ உன்னிடம் தான் மறந்து போனேன் இறுதிவரை சொல்ல!!

நீயென் வரமா சாபமா..

மேல் பொழியும் மழையை, இரவு நிரப்பும் நிலவை, ஓயாத அந்த கடலை, குறையாத இந்த காற்றை, அசைய மறுக்கும் மலைகளை, ஆசை காட்டி மறையும் நட்சத்திரங்களை, சில நல்லவைகளை பல கெட்டவைகளை என எதையுமே உன் நினைவு வராமல் ரசிக்க முடியவில்லை இப்போதெல்லாம்!! இது பிடிக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை எனக்கு!! நீ என் வரமா சாபமா புரியவில்லை.. எதுவாயினும் அது நீயாயிற்றே!!