முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் மற்றும் நான் மட்டுமே !!

தனியாகவே கடற்கரைக்கு செல்பவன் நான்.. அங்கு தனியாக அமர்ந்து அலைகளின் ஒசைக்கு மத்தியில் அந்த அஸ்தமனத்தை ரசிக்கிறவன் நான்.. தனியாக ஒரு காஃபி போட்டு அதை தனியாகவே ருசித்துக் குடிப்பவன்.. இரவில் இளையராஜாவை மட்டுமே துணைக்கு வைத்துக் கொள்பவன் நான்.. முதல் நாள் முதல் காட்சிக்குக் கூட தனியாகவே சென்று கூட்டத்திற்கு நடுவே கூச்சலிட்டுக் கொள்பவன் நான்.. அவ்வப்போது ஆழ்மனதின் அசைவிற்கேற்ப தனியாக நானும் எனது பைக்கும் என ஒரு நெடும்பயணத்திற்கு செல்பவன், உலகம் மறந்து ஒரு நெடும் தூக்கத்தில் ஆழ்பவன்.. உங்கள் யாராலும் என் உடன் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை, தனியாகவே தனியாக இருந்துவிட்டுப் போகிறேன் நான்.. "தனியாகவா?" "தனியாகப் போகிறாயா?" என்று மட்டும் கேட்காதீர்கள்.. என் தனிமையின் பக்கத்தில் உங்களது அனுதாபம் வந்து அமர்ந்துகொள்வதை சகிக்க முடிவதில்லை இப்போதெல்லாம் என்னால்.. இப்படித்தான் நான், அவ்வப்போது பேசிக்கொள்வேன் அதுவும் தனியாகவே, கேட்டும் கேளாததுபோல் கிளம்பி விடுங்கள் !!

விதிகள் மூன்று !!

கிணறு ஒன்றை எட்டிப் பார்க்க எண்ணினால் அதற்கான மூன்று விதிகள்.. முதலில் எட்டிப் பார்க்கும்போது தவறி உள்ளே விழுந்து விடாதிருப்பது முக்கியம்.. அப்படியே விழுந்து விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அக்கிணறு உங்களை விழுங்கி விடுவதற்குள் சுதாரித்துக் கொண்டு வெளிவந்து விடுவது இரண்டாவது விதி.. முக்கியமானதும் மூன்றாவதும் அதை உற்று பார்க்கும்போது உண்டாகும் காட்சி மயக்கத்தில் உங்களை நீங்கள் இழக்காமலிருத்தல் மிக மிக அவசியம்.. அன்பு செலுத்துவதற்கான மூன்று விதிகளும் அவையேதான் !!

இவை போதும் !!

என்னைத் தொலைக்க ரொம்பலாம் நீங்கள் மெனக்கெட வேணாம்.. சிறு அலட்சியம், கொஞ்சமே கொஞ்சம் நிராகரிப்பு இவை மட்டுமே போதும் !!

ஊசலாடுகிறது மனது !!

இச்சை பேச்சென்றால் நீள்கின்றன நிமிடங்கள்.. மிச்சப்படி வேறு பேச்சென்றால் ஏனோ நொடிகளாகவே நீண்டு நொடிந்து போகின்றன.. காதலா? காமமா? கடிகாரத்தின் பெண்டுலமாய் ஊசலாடுகிறது மனது !!

குந்தவை எனும் தேவதை!!

அடியே குந்தவையே.. போதும் இதோடு நிறுத்திக்கொள் தயவுசெய்து.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ வாழ்ந்தவள் நீ.. ஆயினும் ஏன் அடிக்கடி என் கனவில் வந்து போய் வதைக்கிறாய்.. வம்பு செய்து நீ விளையாட நானொன்றும் அந்த வந்தியத்தேவன் இல்லையே.. அவன் வழிந்துகொண்டு நின்றிருப்பான் பார் அங்கே வஞ்சியர்தம் வாசலிலே.. ஒரு வார்த்தை நீ கேட்டிருந்தால் உடனே கிளம்பியிருப்பேன், கழுதையை ஓட்டிக்கொண்டே சென்றிருப்பேன்‌  அந்த கலிபோர்னியா வரையிலும் கூட.. எதற்கும் உதவாத அந்தக் குதிரையை ஓட்டிக்கொண்டு இலங்கை வரை போனதென, அந்தக் குரங்கை போய் விரும்பிவிட்டாய் எதுவும் யோசிக்காமலே.. சென்ற வழியெல்லாம் அவன் குதிரையை மட்டுமா ஓட்டினான்?? கேட்டுப்பார் பூங்குழலியிடம், கட்டுமரக் கப்பலில் அவன் கடலை போட்ட கதைகளை கடலளவு சொல்லுவாள்.. முடிந்த கதை நமக்கெதற்கு, முற்றுப்‌பெற்ற பின் இனி பேசியும் பயனென்ன.. ஏதோ சில நாட்கள் எனக்கு முன்னதாய்ப் பிறந்துவிட்டாய் என்பதால் மட்டுமே விட்டுத் தந்து விட்டேன் அந்த வழிந்த தேவனுக்கு உன்னை.. இழந்து விட்டேன் என்ற கோபத்தில் ஏதும் செய்து விடுவேன் என்றெல்லாம் ஐயம் கொள்ளாதே.. எண்ணியது நடக்காது போனதை எண்ணி அண்டை வீ...

அதுதான் பிரச்சனையே !!

இருக்குற எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும்.. அது என்னன்னா, நல்லா சாப்பிட்டு தூங்குறது.. ஆனா அதுலயும் ஒரு பிரச்சனை இருக்கு.. அது என்னன்னா சாப்பாடு இல்லைங்கறது தான் !!

நினைவுகள் போதும் எனக்கு !!

'தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற வள்ளுவன் வாக்கை மீண்டும் மீண்டும் எவரும் நினைவுப்படுத்தத் தேவையில்லை எனக்கு.. எந்த இதழின் அட்டைப்பக்கத்திலும் என் படங்கள் இடம்பெறத் தேவையில்லை.. எந்த தொலைக்காட்சி தலைப்புச் செய்தியிலும் நான் வரப் போவதில்லை.. உலகின் சாதனைப் புத்தகங்களில் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. இத்தனை பெரிய பூமியில் நானும் சற்றே இருந்துவிட்டு போகிறேனே ஏதோவொரு மூலையில்.. சில இதயங்களின் பாரங்களை இறக்கி வைத்த நினைப்புகள் போதுமெனக்கு எப்போதும் !!

குள வரலாறு !!

நெடுங்காலமாக குளம் ஒன்று இருந்தது எங்கள் ஊரில்.. தலைமுறைகள் பல பார்த்தவர்களுக்கு கூட தெரியவில்லை, அது உருவாகிய காலம் எதுவென்று.. பின் காலத்தின் போக்கில் மரமெல்லாம் விறகாகிட, வரப்பெல்லாம் விலை போய்விட, குளமும் மாறிப்போனது ஊர் கூடி நிற்கும் பஸ் ஸ்டாண்டாய்.. பெயருக்குக் கூட அந்த குளத்தின் நீரையே பார்த்திராத தலைமுறைகளும் கூட இன்னமும் அழைக்கின்றன அந்த இடத்தை குளத்து பஸ்டாண்ட் என்றே.. தலைமுறைகள் கடந்தும் இப்படியாக வாழ்ந்து கொண்டு தானிருக்கிறது, பல குளங்கள் காணாமல் போன வரலாறு !!‍

உங்களுக்கென்றே ஒரு காதல் !!

ஒருத்தி உங்களை ஏற்றுக் கொண்டாள் அல்லது நிராகரித்தாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல எப்போதும்.. உலகில் உங்கள் இருப்பு அழிந்த பின்னும், உங்களுக்கென்று சொல்லிட ஒரு காதலேனும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.. அதில் உங்களை தொலைத்து, பித்தாகி சித்தம் தொலைத்தாலும், உங்களுக்காக ஒருத்தி இருந்ததையும், அப்படி அவள் உலகத்தில் நீங்கள் இல்லாது போனாலும், உங்கள் உலகமாய் அவள் மட்டுமே இருந்ததை உங்கள் காதலாய் சொல்லிச் செல்லுங்கள்.. உங்களுக்கானவள் இன்னும் வராமல் இருக்கலாம், நீங்கள் அவளை இன்னும் அந்தளவிற்கு காதலிக்காமல் இருக்கலாம் அல்லது எங்கோ ஒரு மூலையில் உங்களைப் போலவே அவளும் என்னவன் எங்கேயோ என ஏங்கிக் கொண்டும் இருக்கலாம்.. ஏதோ ஒரு தருணத்தில் அந்த உண்மைக் காதல் உங்களையும் தொடுமாயின், உங்கள் அருகிலும் ஒருத்தி அமர்ந்து கொண்டு, கண்களில் காதலை தேக்கி வைத்துக் கொண்டு ஓயாது சண்டை பிடித்தாலும் அலுக்காது ஆயிரம் முறை கூட கேட்பாள், 'என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்' ஒரு காதல் கதையைக் கூட கொண்டிருக்காத வாழ்வெல்லாம் என்ன வாழ்வு !!

தனிமையிலும் நீ !!

இனம்புரியாத வேதனையொன்று இதயத்தினூடே ஏதோ செய்கிறது..  இன்னதென்றே விளங்காத அது சோற்றுருண்டையில் சிக்கிய முள்ளாய் உள்ளூர உறுத்திக் கொண்டேயிருக்கிறது..  எவருமற்று தனித்துப் போன இவ்விரவில் தூக்கமற்று இருளில் தேடி துழாவுவது எல்லாம் உன் கைகளையே.. இனி எப்போதும் எனக்கென்று இல்லாது போன, எவ்வளவு தேடினும் அகப்படா அவை மட்டுமே போதுமாயிருக்கிறது எனக்கு.. என்ன செய்ய, நீயற்ற தனிமையிலும் கூட என் துணையிருப்பது நீ மட்டுமே !!

வெற்றிடம் வெற்றிடமே !!

ஒருவர் விட்டுச் சென்றதால் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை எந்த‌ காலத்திலும் இன்னொருவராலோ, இன்னொருவரைக் கொண்டோ நிரப்பவே முடியாது, ஏன் மீண்டும் அவர்களே வந்தாலும் கூட! இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ பேர் வந்த போதும் போன போதும், இறுதியில் வெற்றிடம் வெற்றிடமாய் மட்டுமே இருப்பதே நிதர்சனம் !!